சர்வதேச கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீரருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பாராட்டு
புதுச்சேரி: சர்வதேச கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள, புதுச்சேரி மாநில வீரர் பாரதிதாசனை, எதிர்க்கட்சி தலைவர் சிவா பாராட்டினார்.ஜெர்மனியில் சர்வதேச அளவிலான கயிறு இழுக்கும் போட்டி வரும், 4,ம் தேதி துவங்கி, 9,ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியானது ஆண், பெண் ஆகிய இரு பிரிவுகளிலும் நடக்கிறது. இதில், மொத்தம், 24 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்த உள்ளன. இதற்கான இந்திய அணி தேர்வு கேரளா, டில்லி, அரியானா, ஆகிய மாநிலங்களில் மூன்று கட்டமாக நடந்தது. இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் பாரதிதாசன், மூன்று கட்ட தேர்வுகளிலும் பங்கேற்று, இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் வரும், 3,ம் தேதி டில்லியில் இருந்து இந்திய அணி, ஜெர்மனிக்கு புறப்பட உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி வீரர் பாரதிதாசன், எதிர்க்கட்சி தலைவர் சிவாவை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றார். இந்த நிகழ்வில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால், சங்க செயலாளர் சுந்தரமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராசன், சுற்றுசூழல் அணி நவீன், கிளை செயலாளர் அகிலன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.