அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு எம்.எல்.ஏ., வருத்தம் தெரிவிக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் அறிவுறுத்தல்
புதுச்சேரி: அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு எம்.எல்.ஏ., வருத்தம் தெரிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், கூறியதாவது: புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ., அழகானந்தன் அலுவலகத் திறப்பு விழாவை முன்னிட்டு, முதல்வரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைத்திருந்தனர். இது கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்பு இன்றி சம்பவ இடத்திற்குச் சென்று, அதனை அகற்றும் பணியை செய்தனர். அப்போது, அங்கிருந்த சிலர் பேனர்களை அகற்றக் கூடாது என கூறி, கோஷம் எழுப்பியதுடன், செயற்பொறியாளரை தாக்கினர். ஆனால், இது தொடர்பாக அழகானந்தம் எம்.எல்.ஏ., சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது பொதுப்பணித்துறை மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஒரு மிரட்டல் தொனியாகவே பார்க்கப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று அனைத்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு தவறு நடந்தால், ஒட்டு மொத்த நிர்வாகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும் என்பதை எம்.எல்.ஏ., புரிந்து கொள்ள வேண்டும். முதல்வரும், அவரை அழைத்து இதுதவறு என அறிவுறுத்த வேண்டும். புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பரங்கள் தடை சட்டத்தை கொண்டு வந்த முதல்வர் ரங்கசாமியே, சட்டத்தை மீறி பிறந்தநாளில் இவ்வளவு பேனர்கள், கட் -அவுட்கள் வைப்பதை தடுத்திருக்க வேண்டும். குறைந்தது அதிகாரியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முக்கியமாக, எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர்களின் செயல்களுக்கு வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.