பாண்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக் கோரி, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் பாண்டெக்ஸ் நிறுவனத்தில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 67 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதையடுத்து, பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மாதம் மானியத் தொகையாக 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய 67 மாத நிலுவை சம்பளத்தில், 10 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர். இருப்பினும், இதுவரையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதைகண்டித்து, சி.ஐ.டி.யு., செயலாளர் வைத்தியநாதன், தலைமையில் பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து, அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.