‘நிரந்தர சபாநாயகர் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்வது ஏற்புடையதல்ல’ நாஜிம் எம்.எல்.ஏ., கருத்து
காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் நிரந்தர சபாநாயகர் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்வது ஜனநாயக மரபுக்கு ஏற்புடையதல்ல என, தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் தெரவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் அமைச்சர்களுக்கு இலாக ஒதுக்குவது குறித்து பல கட்ட போராட்டம் நடந்தது. தற்போது அமைச்சர்களுக்கு இலகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என்.ஆர்., – பா.ஜ., கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தர சபாநாயகர் இல்லாமல் கவர்னர் உரையாற்றுவது, முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்வது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்புடையதல்ல. எனவே, முதலில் நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுத்த பிறகு கவர்னர் சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும். அதன் பின், முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முன்பாகவே சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தல் தேதியை கவர்னர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.