அரிய வகை வெள்ளை அரிவாள் மூக்கன் பறவை மீட்பு
புதுச்சேரி: வம்புபட்டு ஏரிக்கரையில் அரிய வகை வெள்ளை அரிவாள் மூக்கன் பறவை காலில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருக்கனுார் அடுத்த வம்புபட்டு ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள வயல்வெளிகளுக்கு, ஊசுட்டேரிக்கு வரும் பல்வேறு அரிய வகை பறவைகள் இறை தேடி வந்து செல்கின்றன. இந்நிலையில் வம்புபட்டு ஏரிக்கரை அருகே உள்ள செங்கல் சூளை பகுதியில் நேற்று மாலை மூக்கு பகுதி நீளமான அரிய வகை பறவை ஒன்று, தரையில் விழுந்து பறக்க முடியாமல் தவித்து வந்தது. இதைகண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் அப்பறவையை மீட்டு பார்த்தபோது, அதனுடைய கால்களில் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பறவையை இளைஞர்கள், திருக்கனுார் போலீசார் உதவியுடன் புதுச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மீட்கப்பட்ட பறவை குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த பறவையின் பெயர் அரிய வகையான ‘வெள்ளை அரிவாள் மூக்கன்’ என்பதும், இவை குளிர்கால புலம்பெயர் பறவையாகும். இந்த அரிய வகை பறவை குளிர்கால சீசன்களில் ( செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை) தண்ணீர் வயல்வெளியில் இருக்கக்கூடிய நண்டுகளையும், பூச்சிகளையும் பிடித்து சாப்பிடுவதற்காக வருகின்றன. அதில், வயதான சில பறவைகள் வயல்வெளிகளிலேயே தங்கிவிடுகிறது. மற்ற பறவைகள் எல்லாம் எங்கு தண்ணீரும், அதற்கு ஏற்ற உணவும் கிடைக்கிறதோ அங்கு இடம் பெயர்ந்து சென்றுவிடும் என்றனர்.