கனமழைக்கு பலியானவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: முதல்வர் நிவாரணம் வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழைக்கு பலியானவர் மனைவிக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரண நிதியாக, ரூ.10 லட்சம் வழங்கினார்.புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கடந்த, 9,ம் தேதி பெய்த கனமழை பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.கடந்த, 11,ம் தேதியன்று, ஆட்டுப்பட்டி அருகில் உள்ள வாய்க்காலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட அய்யப்பனின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்தும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நிதியில் இருந்தும் கருணைத்தொகை வழங்க உத்தரவிட்டார்.இந்த நிலையில், அய்யப்பன் மனைவி புவனேஸ்வரியிடம் கருணைத்தொகையாக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, ரூ.6 லட்சம்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.4 லட்சம்; என மொத்தம், ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி, நேற்று வழங்கினார்.இந்த நிகழ்வில் எம்.எல். ஏ.,க்கள் வைத்தியநாதன், ராமலிங்கம், சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், வருவாய் அதிகாரி அருண் அய்யாவு, வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.