மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் சாமிநாதன் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை, அரசு ரத்து செய்ய வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில், அரசு தற்போது மின் கட்டணத்தை, கடுமையாக ஏற்றி உள்ளது. அதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மக்கள் தற்போது குப்பை வரி, வீட்டு வரி, போன்ற வரிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில், மின் கட்டண உயர்வு அவர்களை மேலும் பாதிப்படைய செய்யும்.புதுச்சேரி மாநில அரசு நிதி நிலையை காரணம் காட்டி, தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி வருவது மக்களுக்கு அரசின் மீது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தும். இது வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். அதனால் அரசு மின் கட்டண உயர்வை, ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லை எனில், மாற்று ஏற்பாடாக மாநில அரசு ஒரு குறிப்பிட்ட யூனிட்டுக்கு, மானியமாக வழங்கி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சிரமங்களை போக்கவேண்டும்.மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.