அனுமதி பெறாமல் இயங்கும் விடுதிகளுக்கு சீல்; புதுச்சேரி நகராட்சி கடும் எச்சரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி இயங்கும் 27 தங்கும் விடுதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கும் அனுமதி பெறவில்லை எனில் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில தங்கும் விடுதிகள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக புதுச்சேரி நகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுசம்பந்தமாக புதுச்சேரி கிழக்கு எஸ்.பி.,யிடம் இருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வுகள் அடிப்படையில், புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் செயல்படும் 27 விடுதிகளை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கையின் முதல்படியாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு, 7 நாட்கள் காலக்கெடுவுடன் நோட்டீஸ் அனுப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காலக்கெடு முடிவடைந்தவுடன், அனுமதி பெறாமல் இயங்கும் அனைத்து தங்கும் விடுதிகளுக்கும் உடனடியாக புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடவடிக்கையில் மேற்கொள்ளும். எனவே, சம்பந்தப்பட்ட வணிகர்கள், விடுதி உரிமையாளர்கள் புதுச்சேரி நகராட்சி சார்பில் வெளியிடப்படும் இந்த அறிவிப்பினை பயன்படுத்தி உடனடியாக தங்கள் விடுதிகளுக்கு முறையான அனுமதி பெற அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகள் நடத்தினால் உடனடியாக தாங்கள் நடத்தி வரும் தங்கும் விடுதியை மூடவும் உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சி சார்பில் எந்தவித முன் அறிவிப்பு இன்றி அனுமதி பெறாமல் இயங்கும் அனைத்து தங்கும் விடுதிகளுக்கு புதுச்சேரி நகராட்சி சட்ட விதிகளின்படி உடனடியாக சீல் வைக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.