உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சனிபகவான் கோவில் போலி வெப்சைட் வழக்கு; பெங்களூரு பெண் சிறையில் அடைப்பு

சனிபகவான் கோவில் போலி வெப்சைட் வழக்கு; பெங்களூரு பெண் சிறையில் அடைப்பு

காரைக்கால், : காரைக்கால் திருநள்ளாறு சனி பகவான் கோவில் பெயரில் போலி வெப்சைட் துவக்கி மோசடி செய்த வழக்கில் பெண் சிறையில் அடைக்கப்பட்டார். கோவில் குருக்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனி பகவான் கோவில் உள்ளது. கோவிலுக்கு பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகின்றனர்.இதனால் பிரசாதம், அபிஷேகம், அர்ச்சனை, அன்னதானம் மற்றும் பரிகாரத்துக்கு ஆன்லைன் மூலம் தொகை செலுத்தும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போலி வெப்சைட் மூலம் சனி பகவான் புகைப்படம் கொண்டு தரிசனம், அர்ச்சனை மற்றும் பிரசாதம் பெறுவதற்காக பல லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் மேலாளர் சீனிவாசன் நேற்று முன்தினம் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவில் நிர்வாகம் (www.thirunallarutemple.org) என்ற போலி இணையதளத்தை பயன்படுத்தி பக்தர்களிடம் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் கோவில் குருக்கள் திருநள்ளார் சன்னதி தெருவை சேர்ந்த கணேஷ் குருக்கள் மகன் வெங்கடேஸ்வர குருக்கள், 54, என்பவருக்கு பெங்களூரு, இந்திராநகர் குறுக்கு தெரு சேர்ந்த ஜனனி பரத், 38, என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.இவர், கோவில் குருக்கள் உதவியுடன் கடந்த 2012ம் ஆண்டு பெங்களூரு முகவரியிலிருந்து (www.thirunallarutemple.org) என்ற போலி வெப்சைட் துவங்கி, திருநள்ளார் கோவில் பூஜை செய்து பக்தர்களுக்கு சனி பகவான் தங்க காக வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் கூடிய கவரில் பிரசாதம் அனுப்பி, பக்தர்களிடமிருந்து பல லட்சம் பெற்று கோவில் நிர்வாகத்தை ஏமாற்றியது தெரியவந்தது.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று முன்தினம் வெங்கடேஸ்வர குருக்கள், ஜனனி பரத் ஆகியோரை கைது செய்து, நீதிபதி லிசி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். ஜனனி பரத்தை வரும் 28ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர், புதுச்சேரி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் வெங்கடேஸ்வர குருக்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ