அரசு பள்ளி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான சுயமுன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது. தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். போதைப் பொருள் தடுப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பத் முகாமை துவக்கி வைத்து சுய ஒழுக்கம், இணைய தள விளையாட்டுகளால் ஏற்படும் மனம் மற்றும் உடல் நலப் பாதிப்புகள், சமூக ஊடகங்களை பாதுகாப்போடு பயன்படுத்தும் வழிமுறைகள், மகளிர் பாதுகாப்பு சட்டம் மற்றும் தற்காப்புக் கலையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். புதுச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி தன்னம்பிக்கை, திறன்கள் மேம்பாடு, தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் தடைகள், முடிவெடுக்கும் ஆற்றல், போட்டித் தேர்வுகளை எழுதும் முறைகள், பேச்சு கலை, தலைமைப் பண்பு, எதிர்காலம் குறித்து திட்டமிடுதல் மற்றும் கவனம் சிதறாமல் இலக்குகளை அடையும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார். இதில், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பாலமகேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் பயிற்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஜான்சி, ஜெயந்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.