இரட்டை குடியிருப்பால் மாணவர்கள் பாதிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
புதுச்சேரி : ஜிப்மரில் இரட்டை குடியிருப்பு பெற்றவர்கள் சேர்க்கப்பட்டதால், புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் பாதித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.அவர், கூறியதாவது;புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி, காரைக்கால் மாணவ, மாணவியர் 64 பேர் சேர்க்கப்படுவது வழக்கம். விதியை மீறி இரட்டைக் குடியிருப்பு பெற்ற 9 பேர் நடப்பாண்டு சேர்க்கப்பட்டனர். இதனால், புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 9 மாணவர்கள் சேரமுடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, கவர்னர், முதல்வர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு, புகார் அளிக்கப்பட்டது. அதனப்படையில் ஜிப்மரில் 9 பேரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 60 பேர் ஜிப்மரில், இளநிலை மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்.4 பேரின் சான்று மருத்துவ கல்வி அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. முதல்வர், சட்டசபையில் அறிவித்த ரூ.5 லட்சத்துக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை திட்டத்தின் கோப்பு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், விரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். புதுச்சேரி, அரசு மருத்துவமனையில் தடையில்லா சான்று பெற்று தமிழகம் பகுதி மருத்துவமனைகளிலும் மூலம் சிகிச்சை பெறலாம். இவ்வாறு அவர், தெரிவித்தார்.