உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியை துாய்மையாக்க 1739ல் முயற்சி எடுத்த பிரெஞ்சியர்கள்

புதுச்சேரியை துாய்மையாக்க 1739ல் முயற்சி எடுத்த பிரெஞ்சியர்கள்

புதுச்சேரி நகரம் நுால் பிடித்த மாதிரி நேரானது; மிகவும் அழகானது. ஆனால், துாய்மை என்று வரும்போது சமூக பொறுப்பு யாருக்கும் இருப்பதில்லை. குப்பைகளை கண்ட இடங்களில் வீசி விடுகின்றனர். பொது இடங்களில் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி அசுத்தம் செய்கின்றனர். இதனால் துாய்மை இந்தியா திட்டம் துவங்கியபோதும் கூட, புதுச்சேரி நகரின் துாய்மைக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை.இந்த காலத்தில் மட்டும் அல்ல. பிரெஞ்சியர் காலத்திலும் இதே நிலைமை தான். கடற்கரை, ஆற்றங்கரைகளில் அசுத்தம் செய்யப்பட்டது. எனவே பொது இடங்களில் துாய்மை பேண பிரெஞ்சியர்களும் படாதபாடுபட்டுள்ளனர்.குறிப்பாக தண்ணீர் உள்ள பொது இடங்களில் துாய்மைகளை பேண பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் எந்த முயற்சியும் பலனிக்கவில்லை. பொது இடங்களில் துாய்மை பேண வேண்டும் என அறிவுரை சொல்லிக்கொண்டு மட்டுமே இருந்தால் பலனிக்காது என்று அனுபவ ரீதியாக அறிந்து கொண்டு இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் பிறகு அபராத முடிவுக்கு வந்தனர்.1739ல் கவர்னராக இருந்த துாய்மா பொது இடங்களை துாய்மையாக வைத்திருக்க அதிரடியாக ஓர் உத்தரவினை பிறப்பித்து இருந்தார். புதுச்சேரி பட்டணத்து கடற்கரை, சம்பா கோவில் தெற்கு போகும் உப்பகழியோரம், பட்டணத்து வீதிகள் ஆகிய இடங்களில் மலம் ஜலம் கழிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கடுமையாக எச்சரித்தார். பொது இடங்களில் தண்டோரா போட்டும் அறிவிக்கப்பட்டது.அதன்படி பொது இடங்களில் மலம் ஜலம் கழிப்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அபராதமாக ஆறு பணம் விதிக்கப்பட்டது. அந்த ஆறுபணத்தில் குற்றவாளிகளை பிடித்து தருபவருக்கு இரண்டு பணம் பரிசாக கிடைத்தது. மீதமுள்ள நாலு பணம் சாவடி நீதிமன்றத்தில் போய் சேர்ந்தது.பரிசுக்காக 'உச்சா' போனவரை பலர் காட்டியும் கொடுத்தனர். விபரம் தெரியாமல் பலர் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்தினர். நிர்வாகம் கடினமாக போய்க்கொண்டு இருந்ததாக மக்களும் புலம்பினர்.புதுச்சேரி நகரை சுத்தமாக வைப்பதற்காக மிக சிறந்த நடவடிக்கை 286 ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்டுள்ளது. கவர்னரின் துாய்மா ஆணைக்கு பிறகு இன்று வரை எத்தனையோ சட்டங்கள், பொது இடங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.ஆனால் புதுச்சேரியில் நிலைமைதான் இன்னும் மாறியபாடில்லை. துாய்மைக்காக இன்னும் புதுச்சேரி ஏங்கி கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ