மாநில விளையாட்டுகள் போட்டிகள் காரைக்காலில் 21ம் தேதி துவங்குகிறது
புதுச்சேரி: காரைக்காலில் பிராந்தியத்தில் வரும் மாநில அளவிலான பள்ளி விளையாட்டுகள் போட்டிகள் வரும் 21ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் பள்ளிகளுக்கான மண்டல அளவில் பல்வேறு விளையாட்டுகளை போட்டிகளை நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். மண்டல அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு அடுத்து மாநில அளவிலான போட்டிகளை நடத்த ரெடியாகி வருகிறது.முதற்கட்டமாக மாநில அளவிலான சதுரங்கம், ஹாண்ட்பால், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளை காரைக்கால் பிராந்தியத்தில் நடத்த உள்ளது. 20ம் தேதி எட்டு மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் காரைக்காலை அடைகின்றனர். மறுநாள் 21ம் தேதி காலை 7:30 மணிக்கு மாநில அளவிலான பள்ள விளையாட்டு போட்டிகள் துவங்குகிறது. 22ம் தேதி மாலை 4:30 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.செஸ் போட்டியை பொருத்தவரை ஆண்கள், பெண்கள் என அனைத்து நிலைகளிலும் நடக்கிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் இருந்து 18 மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஹாண்ட்பால், கால்பந்து போட்டியை பொருத்தவரை 19 வயதிற்குட்பட்ட மாணவர்களும், வாலிபால் போட்டியில் 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை காரைக்கால் பிராந்திய முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், விளையாட்டு, இளைஞர் நல இயக்குனரகத்துடன் இணைந்து செய்து வருகிறது.