உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேம்பாலம், சாலை விரிவாக்க திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒப்புதல் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தாராளம்

மேம்பாலம், சாலை விரிவாக்க திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒப்புதல் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தாராளம்

புதுச்சேரி: இந்திரா சிக்னல்-ராஜிவ் சிக்னல் மேம்பாலம், கடலுார் சாலை விரிவாக்க திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ரூ.1000 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளது.புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. முக்கிய சிக்னல்கள் அனைத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நத்தையை போல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய மேம்பாலங்கள் கட்டுவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதால், இந்திரா சிக்னல் - ராஜிவ் சிக்னலை இணைத்து மேம்பாலம் கட்ட புதுச்சேரி அரசு முடிவு செய்தது. அதற்கான, விரிவான திட்டத்துடன் கருத்துருவாக்கம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, மத்திய சாலை அமைச்சகமும் ஒப்புதல் தந்த நிலையில் புதிய மேம்பாலம் கட்டப்படவில்லை. இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் இணைக்கமான ஆட்சி நடந்து வரும் சூழ்நிலையிலும், மேம்பால பணிகளில் துவங்கப்படவில்லை.நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள புதுச்சேரியின் மேம்பாலம் கட்டுமானம், கடலுார் சாலை விரிவாக்க திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ரங்கசாமி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி இருந்தார்.அதை தொடர்ந்து, புதுச்சேரி உட்கட்டமைப்பு திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தனி கவனம் செலுத்தியது. மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளை புதுச்சேரிக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. சில ஆலோசனைகளையும் வழங்கியது.இந்நிலையில் இந்திரா சிக்னல் - ராஜிவ் சிக்னல் மேம்பாலம், கடலுார் சாலை விரிவாக்க திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் 1000 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி முதல்வர் ரங்கசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியின் இந்திரா சிக்னல்-ராஜிவ் சிக்னல் வரையிலான மேம்பால திட்டத்திற்கும், கடலுார் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவு விரிவாக்கத்திற்கும் 1000 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜிவ் சதுக்கம் மற்றும் இந்திரா சதுக்கம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு தகுந்த பொறியியல் தீர்வுகள் தேவை என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சாலை மேம்பாட்டு பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு ஏற்கனவே நடந்து வருகிறது. இது வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும்.இந்த விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டதும், 2025--26 நிதியாண்டில் திட்டத்தைத் துவங்கும் நோக்கத்துடன் கட்டுமான பணிக்கான செலவு மதிப்பீடு உடனடியாக ஒப்புதலுக்கு எடுக்கப்படும்.மேலும், கடலுார் சாலையை 20 கி.மீ., நீளத்தை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துவது தொடர்பாக, புதுச்சேரி பொதுப்பணித்துறையின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.கடலுார் சாலை விரிவாக்கம் இந்திரா சிக்னலில் இருந்து முள்ளோடை வரை ஆறுவழி சாலையாக அமைகிறது. இந்திரா சிக்னல் முதல் ராஜிவ்சிக்னல் வரை 1.5 கி.மீ., தொலைவிற்கு பாலமும், அந்த பாலத்தில் இருந்து 240 மீட்டர் தொலைவிற்கு இறங்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதேபோல், இந்திரா சிக்னல் சதுக்கத்தில் மேலடுக்கு பாலமானது தரையில் இருந்து 11 மீட்டர் உயரத்தில் அமைகிறது. அது நான்கு வழிச்சாலைக்கான 15.60 மீட்டர் அகலத்தில் அமைக்க கருத்துருவாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திட்ட அறிக்கையில் சிறிது மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ