உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சின்னகடை மீன் மார்க்கெட்டை சீரமைக்க கோரி பெண்கள் மறியல் 

சின்னகடை மீன் மார்க்கெட்டை சீரமைக்க கோரி பெண்கள் மறியல் 

புதுச்சேரி : சின்னகடை மீன் மார்க்கெட் கட்டடத்தை சீரமைக்க கோரி மீனவ பெண்கள் புஸ்சி வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி புஸ்சி வீதி மணிக்கூண்டு, சின்ன கடை மீன் மார்க்கெட் கட்டடம் 5 ஆண்டிற்கு முன்பு புனரமைத்து திறக்கப்பட்டது. இக்கட்டடத்தின் மேற்கூரையில் பழுது ஏற்பட்டதால், மழையின்போது தண்ணீர் கசிகிறது. இதனால் சுவரில் ஈரப்பதம் ஏற்பட்டு மின் கசிவு ஏற்படுகிறது. நேற்று காலை மின்சார சுவிட்ச் ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது.இதையடுத்து, மீன் விற்கும் பெண்கள் நேற்று மதியம் 11:45 மணிக்கு, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் புஸ்சி வீதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றது. ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின் கசிவுகளை சரிசெய்வதுடன், மீன் மார்க்கெட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அன்பழகன் கூறுகையில், 'சின்னகடை மீன் மார்க்கெட் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு மழை நீர் கசிகிறது. மின் வியாபாரம் செய்யும் பெண்கள் கடும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால், புகாரை கேட்க கூட மனமில்லாததால் மீனவ பெண்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை