உலக போதை எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள அர்–ரஹ்மான் மேல்நிலைப் பள்ளியில் உலக போதை எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு, பேசுகையில் இன்றைய இந்தியா இளைஞர்களின் கையில்தான் உள்ளது. அதனால் இளைஞர்கள் போதைப்பழக்கத்திலிருந்து மீள வேண்டும். எனவே இன்று முதல் அனைவரும் போதைப்பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என சபதம் ஏற்கவேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பு, விளையாட்டில் கவனம் செலுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றார். தொடர்ந்து போதை எதிர்ப்பையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.