வீடு புகுந்து தொழிலாளியை வெட்டிய வாலிபர் கைது
சிதம்பரம்: சிதம்பரத்தில், வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கூலி தொழிலாளாளியை வீடு புகுந்து கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த மா.கம்யூ., கட்சி நகர் குழு உறுப்பினர் அமுதா. இவரது மகன் ராகுல். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கு முன், காரிய பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜன் சைக்கிளில் வந்தார். அப்போது எதிரில் கஞ்சா போதையில் வந்த ராகுல், அவர் சைக்கிளை பிடுங்கி அடித்து கீழே தள்ளினார். இந்நிலையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கஞ்சா போதையில் இருந்த ராகுல், கோவிந்தராஜன் வீட்டிற்கு சென்று துாங்கிக் கொண்டிருந்த அவரை பட்டாக்கத்தியால், கழுத்து, கால், கை பகுதியில் சரமாரியாக வெட்டினார்.அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடன் ராகுல் அங்கிருந்து தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கோவிந்தராஜனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து ராகுலை கைது செய்தனர். ராகுல் மீது வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.