17 ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி வேட்பாளர் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று கிருஷ்ணா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். பொதுமக்களின் தேவைகளை கேட்டறிந்த அவர், குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் குறைகளை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சுயதொழில் மேம்பாடு, முதியோர் நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என, கூறினார். ஓட்டு சேகரித்த ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு பொதுமக்கள் மலர் துாவி ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அங்கு சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். முன்னதாக கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள செல்வகணபதி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தார். ல.ஜ.க., பொதுச் செயலாளர்கள் துரைசாமி, சுரேஷ், பிரபாகரன், காமராஜ் நகர் தொகுதி பொறுப்பாளர் சித்ரா, சரஸ்வதி, உமா, நாராயணசாமி, பா.ஜ., வர்த்தக அணி தலைவர் சரவணன், நகர மாவட்ட பொதுச் செயலாளர் சினிவாசபெருமாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.