| ADDED : டிச 01, 2025 05:01 AM
புதுச்சேரி: கஞ்சா கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சேதராபட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று பாண்டி - மயிலம் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் கட்ட பையுடன் அதிவேகமாக வந்த இரண்டு பேர், போலீசாரை கண்டதுடன் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி, மடக்கி பிடித்த போலீசார், பைக்கில் இருந்த கட்ட பையை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், வானுார் அடுத்த பூத்துறை, மணவெளி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகன் பாரத், 27; ரெட்டியார்பாளையம், புதுநகரை சேர்ந்த பாஷா மகன் அமீர்கான், 27; என்பதும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள், பைக், 2 மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.