போக்குவரத்து விதிமுறை மீறல் 3 நாளில் 2,684 பேருக்கு அபராதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2,684 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., யாக புதிதாக பொறுப்பேற்றுள்ள நித்யா ராதாகிருஷ்ணன், நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்தும், வார இறுதி நாட்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்களை ஒழுங்குபடுத்துவது, அவற்றை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கி முறைப்படுத்துவது குறித்து சமீபத்தில் போக்குவரத்து எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வார இறுதி தினங்களான கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் போக்குவரத்து போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 999 பேர், பைக்கில் மூன்று பேர் பயணம் செய்ததாக 371, மொபைலில் பேசியபடி சென்றதாக 195, குடிபோதையில் வாகனம் ஓடியதாக 46 உட்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 2,684 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகன சோதனை வரும் நாட்களில் தொடரும் என போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.