| ADDED : டிச 19, 2025 05:15 AM
புதுச்சேரி: வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு 2,844 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார். புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கும் வி.வி.பாட்., மிஷின், முதல் நிலை சரி பார்ப்பு பணிகள் ரெட்டியார் பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடந்தது. இதில் மொத்தம் 2,844 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 1,558 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,766 வி.வி.,பாட் இயந்திரங்கள் வரும் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்த தயாராக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. சரிபார்ப்பு பணியின் போது 61 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 179 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 258 வி.வி.பாட்., ஆகியன பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டு, அதனை உற்பத்தி செய்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதையடுத்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப் பாட்டு இயந்திரம், வி.வி.,பாட் போன்றவை தேர்தல் துறையின் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். இத்தகவலை கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.