மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 3 நாள் பயிற்சி முகாம்
புதுச்சேரி: பஞ்சாயத்துகளின் வளர்ச்சி திட்டம் தயாரிப்பது குறித்து புதுச்சேரியில் பயிற்சி முகாம் இன்று (நவ.,25) துவங்கியது. புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மத்திய அரசின் வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சித் திட்டம் தயாரிப்பது குறித்த 3 நாட்கள் நடத்தப்படும் பயிற்சி முகாம் புதுச்சேரியில் இன்று துவங்கியது. முகாம் நாளை மறுநாள் (27ம் தேதி) வரை நடக்கிறது. இந்த முகாமை ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. சிறப்பான திட்டமிடல் மற்றும் வளமான கிராமங்கள் என்ற நோக்கத்துடன், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு, கிராமங்களின் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளின் அடிப்படைத் தேவைகள், உள்ளூர் வளங்கள், பொதுமக்களின் தேவைகள் மற்றும் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை தயாரிப்பது குறித்து அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாமில் வில்லியனூர், அரியாங்குப்பம் மற்றும் காரைக்கால் வட்டாரங்களை சேர்ந்த திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.