காலாப்பட்டு சிறையில் 3 மொபைல் போன்கள் பறிமுதல்
புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த 3 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள ரவுடிகள் மொபைல்போன் மூலம் வெளியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பதாகவும், கொலை உள்ளிட்ட திட்டங்களை திட்டி அரங்கேற்றி வருவதாக புகார் வந்தது. இதனால் போலீசார் அடிக்கடி சிறைக்குள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான சிறை வார்டர்கள் கைதிகள் அறைகளில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, முதலியார்பேட்டையில் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அன்சாரி அன்சார் என்பவரிடம் இருந்து ஒரு மொபைல்போனும், கழிப்பறையில் இருந்து 2 மொபைல்போன்களை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 மொபைல்போன்களுடன் காலாப்பட்டு போலீசில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் புகார் அளித்தள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.