புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து வேன் திருடிய 3 பேர் கைது
வில்லியனுார்: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து, லோடு வேனை திருடிச் சென்று விற்க முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன். இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பொலிரோ லோடு வேன், கடந்த ஜனவரி மாதம் திருடு போனது. இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி தேவநாதனை போனில் தொடர்பு கொண்ட நபர், வேனின் ஆர்.சி.புக் குறித்து விசாரித்தார். அப்போது, தேவநாதன் தனது வேன் 6 மாதத்திற்கு முன் திருடு போன தகவலை கூறியதும், அந்த நபர் போன் இணைப்பை துண்டித்துவிட்டார். சந்தேகமடைந்த தேவநாதன், இதுகுறித்து வில்லியனுார் போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார், மொபைல்போன் எண்ணின் முகவரியை கொண்டு, திருவண்ணாமலைக்கு சென்று, பச்சையப்பன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மோட்டார் வாகனங்களை வாங்கி, விற்கும் புரோக்கர் என்பதும், இவரிடம் கடந்த 1ம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த முருகன்,42; என்பவர் பொலிரோ லோடு கேரியர் வேனை கொண்டு வந்து விற்க விலை பேசினார். அவரிடம் ஆர்.சி.புத்தகத்தை கேட்டதும், பைனான்சில் இருப்பதாக கூறினார். சந்தேகமடைந்த பச்சையப்பன், வேன் கண்ணாடியில் இருந்த உரிமையாளரின் மொபைல் எண்ணை குறித்து வைத்துக் கொண்டு, மறுநாள் தேவநாதனை தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. பச்சையப்பன் அளித்த தகவலின் பேரில், முருகனை பிடித்து விசாரித்தபோது, முருகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி,30; விஜய்,32; ஆரணியை சேர்ந்த மணிவண்ணன்,27; ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது, பணம் தீர்ந்துவிட்டதால், வீட்டின் முன் நிறுத்தியிருந்த வேனை திருடிவந்து விற்க முயன்றது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த வேனை பறிமுதல் செய்தனர். முருகன், வெள்ளைச்சாமி, விஜய் ஆகியோரை கைது செய்த போலீசார், மூவரையும் நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஆரணி மணிவண்ணனை தேடி வருகின்றனர்.