ஒரு எல்.டி.சி., பணிக்கு 305 பேர் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள யூ.டி.சி., எல்.டி.சி., உள்ளிட்ட 484 அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நிறைவடைந்தது. இதில், 129 எல்.டி.சி., பணியிடத்துக்கு 39 ஆயிரத்து 367 பேரும். 197 பணியிடத்துக்கு 34 ஆயிரத்து 238 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஒருங்கிணைந்த தேர்வு மூலம், யு.டி.சி., - 197, எல்.டி.சி., - 129, உட்பட 484 பணியிடங்களுக்கு, எழுத்து தேர்விற்கான விண்ணப்பங்கள் recruitment.py.gov.inஆள்சேர்ப்பு இணையதளத்தில் கடந்த நவ., 18ம் தேதி முதல் டிச., 14ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில், விண்ணப்பிக்கும் இறுதி நாள் டிச., 14ம் தேதி மேற்கூறிய 12 பதவிகளுக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால் ஆட்சேர்ப்பு இணையதளம் முடங்கியது. இதனையடுத்து, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, எல்.டி.சி., பணிக்கு டிச., 17, 18ம் தேதிகளிலும், யூ.டி.சி., பணிக்கு டிச., 19, 20ம் தேதிகளிலும், இளநிலை நுாலக உதவியாளர் உட்பட 10 பதவிகளுக்கு 21, 22 தேதிகளிலும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. அதிகபட்சமாக 129 எல்.டி.சி., பணியிடங்களுக்கு 39 ஆயிரத்து 367 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு எல்.டி.சி., பணியிடத்துக்கு 305 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. இதேபோல் 197 யூ.டி.சி., பணியிடங்களுக்கு 34 ஆயிரத்து 238 பேர், விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு யூ.டி.சி., பணியிடத்துக்கு 173 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.