ஆபரேஷன் திரிசூல் திட்ட சோதனையில் 4 பேர் கைது
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் சீனியர் எஸ்.பி.,க்கள் தலைமையில் 106 ரவுடிகளின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆளும் கட்சி பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதில், வில்லியனுார் பகுதி செந்தில்குமார், சமீபத்தில் சாமிப்பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த உமாசங்கர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கிடையே, பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் சட்டம், ஒழுங்கு சரி இல்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டி, மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில், ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் நேற்று காலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை புதுச்சேரியில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், காரைக்காலில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பிரபல ரவுடிகள், முன்னாள் ரவுடிகள், குற்றவாளி பட்டியல் உள்ளவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.ஆய்வில், புதுச்சேரியில் 80, காரைக்கால் 26 என மொத்தம் 106 ரவுடிகளின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. அதில், அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருந்ததாக புதுச்சேரியை சேர்ந்த 3 பேரும், காரைக்காலை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 68 பேர் மீது பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.