20 ஆண்டுகளில் 50 தொழிற்சாலைகள் மூடல்
புதுச்சேரி: புதுச்சேரியில் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்ததால், தொழிற்பேட்டைகள் வெறிச்சோடி உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் குற்றம்சாட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரி பாசிக் நிறுவனத்தின், மினரல் வாட்டர் இந்திய அளவில், புகழ்பெற்றது. புதுச்சேரியில் தனியார் மினரல் வாட்டர் தயாரிப்புக்கு அனுமதி இல்லாத போது,அதிக லாபத்தை ஈட்டி தந்த புதுச்சேரி அரசின் பாசிக் மினரல் வாட்டர் நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் தொழிற்சாலையை மூடிவிட்டு, அதற்கு பதில் மதுவை அளவுக்கு அதிகமாக விற்பனை செய்து மனசாட்சி இல்லாத அரசாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்து மாநிலங்களிலும் லாபகரமாக நடந்து வரும் நிலையில், புதுச்சேரியில் மட்டும் ஊழல், அளவுக்கு அதிகமான ஆட்களை நியமிப்பது, தரமற்ற பொருட்கள் மூலமாக கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்ததால், தொழிற்பேட்டைகள் வெறிச்சோடி உள்ளன. மது விற்பனை மூலம் வரும் வருமானத்தை நம்பி எதிர் காலத்தை கேள்விக்குறி ஆக்கக்கூடிய ஒரு அரசு தேவையா? என்பதை மக்கள் உணர வேண்டும்.புதுச்சேரி மினரல் வாட்டர் மீண்டும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.