முருங்கப்பாக்கத்தில் 70 நிமிடம் உலக சாதனை கலை நிகழ்ச்சி
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கத்தில், உலக சாதனைக்காக 70 நிமிடம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, கலைஞர்கள் நிகழ்த்தினர்.புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, ஈச் உலக சாதனை பவுண்டேஷன் சார்பில், உலக சாதனைக்காக,முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில், நேற்று 70 நிமிடம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஐயனாரப்பன், கலைமகள் ஆகிய கலைக்குழுவினர் இணைந்து, நிகழ்ச்சியை நடத்தினர். அதில், உலக அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, கரகாட்டம், பம்பை உடுக்கை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.ஈச் உலக சாதனை பவுண்டேஷன் நிறுவனர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி ஆகியோர் கலந்து கொண்டு, கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி, கவுரவித்தனர்.