சாலையை சீரமைக்க நுாதன போராட்டம்
புதுச்சேரி : சாலை குண்டும், குழியுமாக இருப்பதை கண்டித்து, அரசு மருத்துவமனை முன்பு நுாதன போராட்டம் நடந்தது. புதுச்சேரி அரசு மருத்துவனை விக்டர் சிமோனல் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அடிக்கடி வாகனங்கள் விபத்துகள் நடந்து வருகிறது. சாலை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதை கண்டித்து, சமூக ஆர்வலர் அருண் தலைமையில் யாசகம் கேட்கும் நுாதன போராட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் யாசம் கேட்டு, அந்த பணத்தை வைத்து நாங்கள் சாலையை சீரமைத்துக்கொள்கிறோம் என போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.