புதுச்சேரியில் பிரபல ஓட்டலை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில், கோர்ட் உத்தரவின்படி தனியார் ஓட்டலை ஜப்தி செய்ய வந்தவர்களை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டலின் உரிமையாளர், கடந்த 2010ம் ஆண்டு ஓட்டலை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து ரூ. 65 கோடி கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்தாததால், கடன் தொகை ரூ.198 கோடியாக உயர்ந்துள்ளது. உரிமையாளர் கடனை செலுத்தாததால் வங்கி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடனை செலுத்தாததால், ஓட்டலை ஜப்தி செய்து, வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்பேரில், வங்கி அதிகாரிகள் தங்கள் வழக்கறிஞர்களுடன், புதுச்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலை ஜப்தி செய்ய நேற்று காலை வந்தனர். அப்போது, அங்கிருந்த ஓட்டலின் பங்குதாரர்கள் ஜப்தி செய்ய விடாமல் நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் ஓட்டலின் பங்குதாரர் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் 4ம் தேதி வரை ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக வங்கி அதிகாரிகள் கூறினர். அதனையேற்று இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.