சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சாலையில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.பெஞ்சல் புயலின் போது பெய்த கனமழையில், அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் இருந்து தவளக்குப்பம் வரை மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி - கடலுார் முக்கிய சாலை என்பதால், ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அரியாங்குப்பம் டோல் கேட் பகுதி சாலையில் பைக்கில் சென்ற வாலிபர், பஸ் மோதி சம்பவயிடத்திலேயே இறந்தார். அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் மற்றும் சிக்னல் அருகே நீண்ட மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தினால், வாகனங்கள் திடீரென பிரேக் போடும் போது, பின்னால் செல்லும், இருசக்கர வாகனத்தில், செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். பொதுப்பணித்துறையினர், பள்ளங்களில், பேட்ச் ஒர்க் செய்து, பெரிய அளவில் விபத்து நடப்பதற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.