தேசிய யூத் ஐடியாதான் போட்டியில் தேர்வு ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி சாதனை
புதுச்சேரி: ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் தேசிய அளவிலான யூத் ஐடியாதான் போட்டிகளில் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். தொழில் முனைவோர் மற்றும் தொழில் திறன் கவுன்சில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் டில்லி ஐ.ஐ.டி., சார்பில் 2024ம் ஆண்டு 'யூத் ஐடியாதான்' நான்காவது பதிப்பில் தேசிய அளவிலான முதல்நிலை போட்டிகள் நடந்தது. இதில், 4 முதல் பிளஸ் 2 வரை பயிலும், 5000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக, 50 ஆயிரம் கண்டுபிடிப்புகளில் இருந்து 1500 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டன.அடுத்து, 500 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில், 6 படைப்புகள் ஆதித்யா மாணவர்களின் படைப்புகளாகும். 500 படைப்புகளில் காணொளி நேர்காணல் மூலம் 100 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன.இதில், ஆதித்யா பள்ளியில் பிளஸ் 1 மாணவர் நிஷாந்த், பிரீதிஷ், 9ம் வகுப்பு வர்ஷித், தீபக், 8 ம் வகுப்பு பிரதிக், ஜோஷ்வா, பிரீதிஷ், சிவதர்ஷன் ஆகிய மாணவர்களின் இரண்டு படைப்புகள் தேர்வாகின. இறுதியாக, டில்லியில் நடந்த நேர்முக போட்டியில் 8 ம் வகுப்பு மாணவர்கள் பிரதிக், ஜோஷ்வா, பிரீதிஷ், சிவதர்ஷன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள், அகில இந்திய அளவில் தேர்வு பெற்ற மூன்று கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.மேலும், அகில இந்திய பள்ளிகளுக்கான 'சிறந்த முதல்வர் விருது' ஆதித்யா பள்ளி முதல்வருக்கு வழங்கப்பட்டது. அகில இந்திய அளவில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி 'சாதனை சான்றிதழ்' விருதும் பெற்று சாதனை படைத்துள்ளது. விருது பெற்ற முதல்வர் மற்றும் மாணவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன் சால்வை அணிவித்து பாராட்டினார். பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.