உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறு சதவீத மானியத்தில் மணிலா விதைகள் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

நுாறு சதவீத மானியத்தில் மணிலா விதைகள் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

புதுச்சேரி: உயர் ரக மணிலா விதைகள், நுாறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு; மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், எதிர் வரும் ரபி பருவத்தில் (கார்த்திகை பட்டம்), அகில இந்திய அளவில், எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்பளவினை அதிகரித்து சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிடவும், விவசாயிகள் அதிக வருமானம் பெற்றிடவும், எண்ணெய் வித்துப்பயிர்களுக்கான தேசிய இயக்கத்தினை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மணிலா சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, எக்டேர் ஒன்றுக்கு வேளாண் பல்கலைக்கழக பரிந்துரையான 150 கிலோ விதையளவு, தேசிய விதைகள் கழகத்தின், சான்றிதழ் பெற்ற, ஜி-5 என்று பொதுவாக அழைக்கப்படும் கிர்னார் 5, உயர் ரக மணிலா விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விதை மானியத்தில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் புதுச்சேரி அரசும் அளிக்கும். இத்துடன், புதுச்சேரி அரசு வழங்கும் ஏக்கருக்கு ரூ.8,000 பயிர் உற்பத்தி மானியத் தொகையும் சேர்ந்திடும்போது இத்திட்டம் மணிலா சாகுபடி விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். வேளாண் துறையின் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் விவசாயிகள், அவர்கள் சார்ந்த உழவர் உதவியகத்தில் தங்களது பெயர்களையும், சாகுபடி செய்ய இருக்கும் பரப்பளவினையும்வரும் 7ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ