கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும் அரசுக்கு அ.தி.மு.க., கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் பெருகி வரும் கொசு தொல்லையை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும் என, அரசுக்கு, அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை: புதுச்சேரியில் கழிவு நீர் வாய்க்கால்களில் சரிவர துார் வாராததாலும், தேர்தலை முன்னிறுத்தி பல பகுதிகளில் அவசர, அவசரமாக வாய்க்கால் பணி நடைபெற்று வருவதால், ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்கடியால் மக்கள் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் நலன் சம்மந்தப்பட்ட இப்பிரச்னையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, முதல்வர், இந்த மூன்று துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட வேண்டும்.