கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி: கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:மத்திய அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தரமாக கல்வி பயில வேண்டும் என கல்வி உரிமைச்சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்க வேண்டும்.ஆனால், என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி ஆட்சியில் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தாது வியப்பாக உள்ளது. புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டத்தை உடனடியாக செயல்படுத்த கவர்னர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி மத்திய பல்கலைக்கழத்தில் உள்ள அனைத்து பாடங்களிலும் 25 சதவீத உள் ஒதுக்கீட்டை புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர், மத்திய அரசு அனுமதியளித்தால் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டியது பல்கலைக்கழக துணைவேந்தரின் பொறுப்பாகும்.பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில நிர்வாகிகள் ரவி பாண்டுரங்கன், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வேந்தன், ஞானவேல் ஆகியோர் உடனிருந்தனர்.