கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
புதுச்சேரி : கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரியில் தொழிலதிபர்களை மிரட்டி, ரவுடிகள் சிலர் மாமூல் வசூலிக்கின்றனர்.யார் பெரிய ரவுடி என்பதை நிருபிக்க, ரவுடி கும்பலுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் வெட்டி கொலை செய்வதும் நடக்கிறது. ரவுடிகளின் கூட்டாளிகள், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்குகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போஸ் கொடுப்பதும், ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர்.இந்நிலையில், கோரிமேடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய ரெட்டியார்பாளையம் லம்பார்ட் சரணவன் நகரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சஞ்சய், 19; மொபைல்போனை ஆய்வு செய்தனர். அவர் வீச்சரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வீடியோவை, தனது வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ்சாக வைத்திருந்தார்.இதனால், போலீசார் சஞ்சயை கைது செய்தனர்.அதுபோல், ஒதியஞ்சாலை தாவீதுபேட் ரயில் பாதை அருகே, கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை மிரட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சென்று, கத்தியுடன் திரிந்த வாணரப்பேட்டை, ராசு உடையார்தோட்டம் சூர்யா (எ) அய்யப்பன், 35; என்பவரை கைது செய்தனர். சூர்யா மீது, 2 கொலை வழக்கு, ஒரு வெடிகுண்டு வீசிய வழக்கும் உள்ளது. சூர்யாவை கைது செய்த போலீசார், வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.