சிறுவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா அணி சாம்பியன்
புதுச்சேரி: 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆந்திரா அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.ஏழு தென் மண்டல மாநில கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானங்கள் மற்றும் லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்து வந்தது.லீக் போட்டிகள் முடிந்த நிலையில், முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆந்திரா மற்றும் கர்நாடகா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. சீகெம் மைதானம் 2ல் போட்டி நடந்தது.முதலில் விளையாடிய கர்நாடகா அணி 88.5 ஓவர்களில் 340 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கர்நாடகா அணியின் நிதிஷ் ஆர்யா 177 ரன்கள் எடுத்தார். ஆந்திரா அணியின் தினேஷ் மற்றும் சிம்மா சாத்விக் தலா 4 விக்கெட் எடுத்தனர்.நேற்று ஆந்திரா அணி 4 விக்கெட் இழந்து 343 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது . ஆந்திரா அணியின் ஸ்ரீராம் ஆட்டம் இழக்காமல் 158 ரன், வினோத் 121 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.பரிசளிப்பு விழாவில், கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் கவுரவத் தலைவர் தாமோதரன், கவுரவ செயலாளர் ராமதாஸ், தலைமை செயல் அதிகாரி மையங் மேத்தா, தேர்வாளர் சைஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்சியை ராம் மோகன் சிங் தொகுத்து வழங்கினார். வெற்றி கோப்பையை தாமோதரன் ஆந்திரா அணிக்கு வழங்கினார்.இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஆந்திரா அணியின் ஸ்ரீராம் வென்றார் . தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருதை கர்நாடக அணியின் நிதிஷ் ஆர்யா, சிறந்த பவுலர் விருதை தமிழ்நாடு அணியின் அனிருத், சிறந்த ஆல் ரவுண்டர் விருதை கர்நாடக அணியின் ஆர்யன் சிங் ஆகியோர் பெற்றனர். தொடர் நாயகன் விருதை ஆந்திரா அணியின் வினோத் வென்றார்.