சட்டசபையில் 781 கேள்விகளுக்கு பதில்
புதுச்சேரி : சட்டசபை கூட்டத் தொடரில் 781 கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.இந்த கூட்டத்தொடரில் 579 உடுக்குறியிட்ட வினாக்கள், 263 உடுக்குறியிடா வினாக்கள் என மொத்தம் 842 வினாக்கள் பெறப்பட்டன. இதில் 541 உடுக்குறியிட்ட வினாக்கள், 240 உடுக்குறியிடா வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.ஒரு நிதி மசோதா ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. 9 நாட்கள் கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்பட்டது. 2 நாட்கள் காலை, மாலை என 2 வேளையும் சபை நடத்தப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் கருத்துக்களும் சபையின் கவனத்துக்கு வர வேண்டும் என்பதற்காக பூஜ்ய நேரத்திலும் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.சட்டசபை குழுக்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட்டனர். நில அளவை துறையின் 3 அறிவிக்கை, ஆணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதிக வினாக்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். இதற்காக முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி. இதற்கு உறுதுணையாக செயல்பட்ட அனைத்து அரசு துறை செயலர்கள், ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நன்றி. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற எம்.எல்.ஏ.,க்கள் தனி நபர் தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.சபை நிகழ்வுகளை காரைக்காலை சேர்ந்த 50 அரசு பள்ளி மாணவர்கள் நேரில் கண்டனர். இதற்காக கல்வித்துறைக்கு பாராட்டுக்கள். கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் நேரடியாக சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரவேற்பு பெற்றது. இதற்கான ஏற்பாடு செய்த செய்தி விளம்பரத் துறைக்கு நன்றி.சட்டசபையில் மனமுவந்து தமிழில் உரையாற்றிய கவர்னருக்கு சட்டபையின் சார்பாக நன்றி. சபை நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற ஒத்துழைத்த உறுப்பினர்களுக்கு நன்றி.வரும் காலத்தில் இதைவிடவும் சிறப்பாக மக்களுக்கு பணியாற்ற ஆர்வத்துடன் செயல்பட வாழ்த்துக்கள். சட்டசபை பாதுகாப்பு பணிபுரிந்த காவல்துறை, போக்குவரத்து காவல், ஊர்க்காவல் படையினருக்கு நன்றி. துப்புரவு பணியாளர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பொதுப்பணி, மின்துறை அலுவலர்கள், சபை காவலர்கள், சட்டசபை செயலக ஊழியர்களுக்கு நன்றி. சிறப்பாக செயல்பட்ட சட்டசபை செயலருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
18வது முறையாக பட்ஜெட்
முதல்வருக்கு பாராட்டுசபாநாயகர் செல்வம் பேசும்போது, கடந்த 10ம் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடர் 13 அமர்வு நாட்களை கொண்டிருந்தது. முதல்வர் 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி 18வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும், சட்டசபை சார்பாகவும் பாராட்டுக்கள் என்றார்.