சமூக பாதுகாப்பு வாரியத்தில் விண்ணப்பம் விநியோகம்
புதுச்சேரி : புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 13ம் தேதி முதல் வழங்கப் படுகிறது. சமூக பாதுகாப்பு வாரிய செயலர் அறிக்கை: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறையின் கீழ் 2001ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கம், அரசின் ஆணைப்படி, கடந்த மே 12ம் தேதி முதல் சமூக பாதுகாப்பு வாரியமாக மாற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. புதுச்சேரி அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக ஆண்டு சந்தா செலுத்தி வரும் உறுப்பினர்கள் அனைவரும், சமூக பாதுகாப்பு வாரியத்தின் உறுப்பினர்களாக மாற்றப்பட்டு வாரியத்தின் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. வரும் 13ம் தேதி முதல் சமூக பாதுகாப்பு வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் அளிக்கப்பட உள்ளது. வாரியத்தின் சட்ட விதிகளின்படி பழைய உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவாக ரூ.100 மற்றும் புதிய உறுப்பினர் சுய தொழில் செய்யும் தொழிலாளராக இருந்தால் சேர்க்கைக்கு ரூ. 300, கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். சமூக பாதுகாப்பு வாரியம் முந்தைய புதுச்சேரி அமைப்புச்சாரா தொழிலாளர் நலசங்கம்கட்டடத்திலேயே தொடர்ந்து செயல்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு தொழிலாளர் அதிகாரி, சமூக பாதுகாப்பு வாரியத்தை அணுகி தெரிந்து கொள்ளவும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.