| ADDED : நவ 19, 2025 08:07 AM
புதுச்சேரி: அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் மற்றும் ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களில், தற்போதைய அரசு இதுவரை 2,800பணியிடங்களை நிரப்பியுள்ளது. சட்டசபை தேர்தல் அறிவிப்பிற்கு முன் மேலும், 1,000 பணியிடங்களை நிரப்பிட அரசு திட்டமிட்டுள்ளது. அதனையொட்டி கடந்த 16ம் தேதி 354 அரசு பணியிடங்களை, புதுச்சேரி தேர்வு முகமை மூலம் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு நேற்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு நேற்று இரவு 8:00 மணி முதல் டிசம்பர் 14ம்தேதி மாலை 3:00 மணிவரை https:/recruitment.py.gov.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.