55 அரசு சேவைகள் மக்களுக்கு வழங்க ஏற்பாடு: தயாராகும் பொதுசேவை மையங்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பொது சேவை மையங்கள் வாயிலாக 172 அரசு துறைகள் சேவைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, ரேஷன்கடைகள் உள்ளிட்ட 55 அரசு சேவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அனைத்து சேவைகளையும் வழங்கிட புதுச்சேரி மாநிலத்தில் 307 பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொது சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது 77 அரசு துறை சேவைகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பட்டா, புலம்பட நகல், வில்லங்கம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட ஐந்து சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.இதனால் மீண்டும் அரசு துறைகளுக்கு பொதுமக்கள் நாடி செல்கின்றனர். கூட்டமும் பல்வேறு அரசு துறைகளில் அலைமோதுகிறது.பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து அவர்கள் இருப்பிடத்திலேயே நேர்த்தியான மற்றும் சிறந்த சேவை வழங்குவதற்காக தற்போது புதுச்சேரியில் உள்ள பொது சேவை மையங்கள் வாயிலாக கூடுதலாக 172 அரசு துறைகள் சேவைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 55 அரசு சேவைகள் விரைவில் பொது சேவை மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் ரேஷன் கார்டு பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட 9 சேவைகளும், சமூக நலத் துறையின் 2 இரண்டு சேவைகளுக்கான அனைத்து தணிக்கையும் முடிந்து தயாராக உள்ளது. மீதமுள்ள அரசு துறைகளில் சேவைகளை பொது சேவை மையங்கள் மூலம் வழங்குவதற்கான பணிகள் தகவல் தொழில்நுட்ப துறை அனைத்து துறைகளை தொடர்பு கொண்டு முடுக்கிவிட்டுள்ளது.சில சேவைகளை அந்தந்த அரசு துறைகளே வழங்கி வருகின்றன. இந்த சேவைகளும் பொது சேவை மையங்கள் வாயிலாக வழங்க ஆய்வு நடந்து வருகின்றன. உதாரணமாக, மின் துறையின் இணையதளம் வாயிலாக கட்டணம் கட்டலாம். இதனை பொது சேவை மையம் மூலமாக கட்ட வசதி ஏற்படுத்தும்போது மூன்றாம் நபர் பரிவர்த்தனை தேவைப்படுகிறது.அதற்கு சேவை பங்கீடு தொகை தர வேண்டியுள்ளது. இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு கண்டால் விரைவில் அரசின் 172 சான்றிதழ் சேவைகளும் அமலுக்கு வந்துவிடும். மாதிரி மையம்
இந்தியாவில் 9 மாநிலங்களில் 10 மாவட்டங்களில் உள்ள 4,740 கிராம பஞ்சாயத்துகளில் மாதிரி பொதுசேவை மைய திட்டம் பரீசாட்த முறையில் துவங்கப்பட உள்ளன. இந்த 10 மாவட்டங்களில் புதுச்சேரியும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிறப்பாக செயல்பட்ட 81 பொது சேவை மையங்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆதார் சேவைகள், வங்கி பரிவர்த்தனை, புதுச்சேரி அரசின் கூடுதல் சான்றிதழ் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இங்கு காத்திருக்கும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர், மாற்று திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதால் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மாதிரி பொதுசேவை மையங்கள் அனைத்தும் விரைவில் புது பொலிவு பெற உள்ளன.