ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகக்குழு கூட்டம் இரு மாநில கவர்னர்கள் பங்கேற்பு
வானுார்: ஆரோவில் பவுண்டேஷனின், 70வது நிர்வாகக்குழு கூட்டம் டவுன் ஹாலில் நேற்று நடந்தது. ஆரோவில்லில், அரவிந்தர் மற்றும் அன்னையின் கனவு திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், ஆரோவில் பகுதியை மேம்படுத்தவும் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கிரவுன் சாலை அமைக்கும் பணி, மாத்ரி மந்திரை சுற்றி லேக் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல் திட்டங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, நேற்று டவுன் ஹாலில் உள்ள அதன் அலுவலக வளாகத்தில் ஆரோவில் பவுண்டேஷனின், 70வது நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. ஆரோவில் நிர்வாகக் குழு தலைவரும், தமிழக கவர்னருமான ரவி தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினரும், புதுச்சேரி கவர்னருமான கைலாஷ்நாதன், செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆரோவில் பவுண்டேஷனின் நிர்வாக செயல்பாடுகள், மேம்பாட்டுக்கான முக்கிய மற்றும் எதிர்கால திட்டங்கள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், அரவிந்தர் மற்றும் அன்னையின் குறிக்கோள்களை அடைவதற்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.