விழிப்புணர்வு ஊர்வலம்
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் 'சுச்சாதா ஹி சேவா' துாய்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் சுச்சாதா ஹி சேவா இரு வார துாய்மை பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, மண்ணடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தொடர் துப்புரவு பணி நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, திருக்கனுாரில்ஆணையர் எழில்ராஜன் தலைமையில் 'சுச்சாதா ஹி சேவா' தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் சுப்ரமணிய பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். அவர்களுடன் ஹெச். ஆர். ஸ்கொயர் தனியார் துாய்மை பணியாளர்கள், கொம்யூன் ஊழியர்கள் துாய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.பள்ளி தாளாளர் சம்பத், கொம்யூன் பஞ்சாயத்து மேற்பார்வையாளர் சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.