உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை: செப்., 29 முதல் நகரமும் முழுவதும் அமலாகிறது

புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை: செப்., 29 முதல் நகரமும் முழுவதும் அமலாகிறது

புதுச்சேரி: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் அனைத்து விதமான பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் மற்றும் தற்காலிக விளம்பரப் பலகைகளை அமைக்க தடை விதித்துள்ளது. வலுவடைந்து வரும் எல். நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னல் அருகே காற்று மற்றும் மழையின் காரணமாக பேனர்கள் சரிந்து விழுந்தன. மேலும், தொலைத்தொடர்பு கோபுரம் சரிந்து விழுந்தது மற்றும் மின் கம்பம் சாய்ந்தது போன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. சரியாகப் பொருத்தப்படாத பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பலத்த காற்றின் போது சரிந்து விழுந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளை ஏற்படுத்துவதுடன், மின்கம்பிகள் மற்றும் அவசரக் காலப் போக்குவரத்துக்கும் கடும் இடையூறை ஏற்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி முழுவதும் அனைத்து விதமான பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் மற்றும் தற்காலிக விளம்பரப் பலகைகளை அமைக்க தடை விதித்துள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி கலெக்டரும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான குலோத்துங்கன் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். முழுமையான தடை: பொது மற்றும் தனியார் இடங்கள், சாலை ஓரங்கள் மற்றும் ரோடு டிவைடர்களில் எந்தவொரு நபர், அரசியல் கட்சி, அமைப்பு அல்லது அரசு முகமைகள் பேனர்கள், கட்-அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் வளைவுகளை அமைக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. உடனடி அகற்றம்: ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகளையும் அதனை வைத்த நபர் கள் அல்லது அமைப்புகள் உடனடியாக அகற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். அதிகாரிகள் குழு அமைப்பு: நகராட்சி ஆணையர்கள், கொம்யூன் பஞ்சாயத்துகள், பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை எவ்வித முன்அறிவிப்புமின்றி உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். அமலாக்கக் காலம்: இத்தடை உத்தரவு இன்று 29-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலம் முடியும் வரை அல்லது மறுஉத்தரவு வரும் வரை இத்தடை நடைமுறையில் இருக்கும். சட்ட நடவடிக்கை: இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடுமையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சீசன் காலம் போன்று இல்லாமல் நிரந்தரமாக இந்த உத்தரவினை அரசு தொடர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்