பீகார் மாநில சிறுமி மாயம்
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், ரோகிட்டா பகுதியை சேர்ந்தவர் பெரோஜ் அன்சாரி 37; புதுச்சேரி, காட்டுக்குப்பத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இரண்டாவது மகள் லாடினி, 13, பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல், பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அவரது மகள் லாடினி வீட்டிலேயே இருந்தார். வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பியபோது, லாடினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை பெரோஜ் அன்சாரி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, ஆங்காங்கே சிறுமிகள் மாயமாகி வரும் நிலையில், கிருமாம்பாக்கம் அருகே பீகார் மாநில சிறுமி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.