முதலியார்பேட்டைக்கு சுத்தமான குடிநீர் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் உறுதி
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவேன் என, பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். முதலியார்பேட்டை தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் கூறியதாவது; முதலியார்பேட்டை தொகுதியில் கடந்த 5 ஆண்டில், ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தேர்தலில் நான் வெற்றி பெற்று வந்தால் நன்றாக இருக்கும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். தொகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமில்லாமல் உள்ளது. அதனால், தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் இங்குள்ள 2 பெரிய ஏரிகளை துார்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேமித்து, அதன் மூலம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவேன். இதேபோல், நகரப்பகுதியில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் குளம், ஏரிகளை துார்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். தற்போது மக்கள் உப்பு கலந்த தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவது உடலுக்கு நல்லது கிடையாது. ஆகையால் அந்த காலத்தில் மக்கள் குடித்த தண்ணீரை போன்று மீண்டும் நல்ல குடிநீரை வழங்க வேண்டும் என்பது எனது லட்சியமாகும். மேலும், தொகுதியை அமைதியான, அழகான தொகுதியாக மாற்றுவேன்' என்றார்.