உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உப்பனாற்றில் பாலம் கட்டுமான பணி: அதிகாரிகளுடன் அமைச்சர் திடீர் ஆய்வு

உப்பனாற்றில் பாலம் கட்டுமான பணி: அதிகாரிகளுடன் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுச்சேரி : உப்பனாற்றில் கட்டப்பட்டு வரும் பாலத்தை காமராஜர் சாலையுடன் இணைப்பது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று மாலை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். புதுச்சேரி நகரின் மிகப் பெரிய கழிவு நீர் வாய்க்காலாக உப்பனாறு உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, காமராஜர் சலை மற்றும் மறைமலையடிகள் சாலையை இணைக்கும் வகையில் உப்பனாற்றில் தடைபட்டுள்ள பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளது. இதற்காக காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலை அருகே உள்ள உப்பனாற்றில் மண்ணை கொட்டி பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினால், உப்பனாற்றில், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. இதனால், கடந்த வாரம் திடீரென பெய்த கனமழையில், உப்பனாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து, காமாராஜர் சாலை - மறைமலையடிகள் சாலைக்கு இடைபட்ட உப்பனாற்றில் தேங்கிய மழைநீருடன் கலந்த கழிவு நீர், கென்னடி நகர், குபேர் நகர், கோவிந்த சாலை, சாந்தி நகர், இளங்கோ நகர், சாரதி, நேரு நகர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால், உப்பனாற்றில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்கவும், கட்டுமான பணிக்காக கொட்டியுள்ள மண்ணை அகற்றுமாறு நேரு எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்நிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று மாலை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேற்று மாலை காமராஜர் சாலை உப்பனாற்றில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். அப்போது, உப்பனாற்றில் கட்டப்பட்டு வரும் பாலத்தை காமராஜர் சாலையுடன் இணைப்பதும் குறித்தும், இதற்காக சாலையின் தெற்கில் உள்ள பழைய பாலத்தை இடிப்பது குறித்தும், கட்டுமான பணியை விரைந்து முடிப்பது மற்றும், ஆற்றில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவது குறித்தும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை