ஜிப்மரில் பி.எஸ்சி., நர்சிங் கலந்தாய்வு துவங்கியது
புதுச்சேரி, : புதுச்சேரி ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் மற்றும் அலைடு ெஹல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி., நர்சிங் - 94; அலைடு ெஹல்த் சயின்ஸ் - 87 என இரு பிரிவுகளிலும் மொத்தம், 181 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த 2024-25ம் ஆண்டிற்கான, மாணவர் சேர்க்கைக்கு, ஜிப்மர் இணையதளத்தில், கடந்த அக்டோபரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் தரவரிசைப்பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் 2,738 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.இவர்களுக்கான கலந்தாய்வு ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கில் நேற்று துவங்கியது. கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தற்காலிக பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இன்று காலை கலந்தாய்விற்கான செயல்முறைகள் நடக்க உள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாளை காலை 9:00 மணிக்கு, ஜிப்மர் அகாடமிக் மையத்தில், மருத்துவ பரிசோதனையும், மதியம் சேர்க்கை ஆணையும் வழங்கப்படுகிறது. வரும், 25ம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளன.