துப்புரவு பணியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி நடக்க உள்ளதால், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும், செப்., 17ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை, 'துாய்மையே சேவை' எனும் நோக்கில், துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, நேற்று தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை மைய திடல், காமராஜர் மணிமண்டபம் சுற்றுப்புறம், சாரம், எல்.ஐ.சி., அருகில் குறுங்காடுகள், ஆரோக்கியம்மாள் காமராஜர் நகர் கார்டன், ஜெயராம் ஓட்டல் பின்புறம் போன்ற பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி பகுதியில் நடந்த துப்புரவு பணியை, கலெக்டர் குலோத்துங்கன், காமராஜர் மணி மண்டபம் பகுதியில் துப்பரவு பணியை ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் பல்வேறு துறை அரசு ஊழியர்கள், பாத்திமா பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஸ்வச்சதா கார்பரேஷன் மற்றும் கிரீன் வாரியர் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று, 3 டன் குப்பைகளை அப்புறப்படுத்தினர்.துப்புரவு பணி, நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நடக்க உள்ளது. அதனால் பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் பணிகளில் பங்கேற்று, நகரை துாய்மையாக வைத்திருக்க உழவர்கரை நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.துாய்மை பணிகளில் பங்கேற்க நகராட்சியின், 7598171674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, 9444794570 என்ற எண்ணில், நகராட்சியின் சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளலாம்.