நலத்திட்டம் வழங்கல் என்ற பெயரில் அரசு சொத்துக்களை பாழாக்கலாமா?
புதுச்சேரி:புதுச்சேரியில் நலத்திட்டம் என்ற பெயரில் அரசு சொத்துக்களை சேதப்படுத்துவதை தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும்.தேர்தல் வந்துவிட்டாலே, மக்களை இடுப்பில் துாக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் செயல்களால், அரசு சொத்துக்களான சாலை மற்றும் சென்டர் மீடியன்கள் சேதமாவதை யார் தடுப்பது. இது விழா நடத்தும் அரசியல்வாதிகளுக்கு தெரியுமா?புதுச்சேரியில், நலத்திட்டம் வழங்குகிறோம் என்ற பெயரில் கூத்தடிக்கும் அரசியல்வாதிகளின் 'அட்ராசிட்டி'யை, அவர்களுக்கு யார் உணர்த்த போகிறார்கள். இவர்கள் கொடிக்கம்பங்கள் நடுவதற்காக சாலை மற்றும் சென்டர் மீடியன்களில் 'ட்ரில்லர்' கொண்டு துளையிட்டு இரும்பு கொடிக் கம்பங்கள் நடுவதால், தெருவிளக்குகளுக்காக தரையில் புதைக்கப்பட்டுள்ள மின் கேபிள்கள் சேதமடைந்து விடுகிறது.இதனால், சாலை மற்றும் சென்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் நட பொதுப்பணி துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால், அந்த உத்தரவை செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் அக்கறை காட்டாமல் உள்ளனர்.அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள் தான். எனவே, அரசியல்வாதிகளின் அட்ராசிட்டியை தடுத்து நிறுத்த அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.